Thursday, May 17, 2012

வழக்கு எண் 18/9


வழக்கு எண் 18/9

மிக அருமையான படம். கதைப்பின்னலும், அதன் காட்சியவதாரமும் சிறப்பான வகையில் அமைத்திருப்பதால், தன் அழகியிலுக்குள் ரசிக்கத்தெரியாத மட்டியையும் உள்ளுக்குள் இழுத்துப்போட்டுக்கொண்டுவிடுகிறது, வழக்கு எண் 18/9. இது பலாஜி சக்திவேல் அவர்களிடம் இருக்கும் கலையின் தெளிவு. இவர் பார்வையாளரைத் தன்வசப்படுத்திடும் யுத்தி இசமாகக்கூடும். ஆனால் கருத்தியல் ரீதியாக பார்க்கும் போது... இந்தப் படத்திலும் (காதல் படத்தில் சந்தியாவிலும்) பள்ளிச்சீருடையோடு காதலன் காதலி நகரின் பட்டிதொட்டிகளிலெல்லாம் போஸ்டர்களாக பேனர்களாக பளிச்சிட்டு திரையரங்குக்கு யாரை அழைக்கிறார்கள். அழைத்ததுதான் அழைத்தார்கள். வந்தவர்களுக்கு திரைப்படம் என்ன செய்தி கொடுக்கிறது. செய்தியை விளக்கும் படத்தின் காட்சியால் பார்வையாளர்களுக்கு எற்பட்ட உணர்வுகள் என்ன...?
சமூகத்தில் அவரது படங்கள் மூலமாக என்ன செய்ய முனைந்திருக்கிறார் என்பது யோசனைக்குறியது?
இந்தப் படத்தில் இரண்டு பகுதிகள் தான் இருப்பதாக உணர்கிறேன். ஒன்று பள்ளிச்சிறார்கள் இன்னொன்று வீதிக்குழந்தைகள்.
பள்ளிக்குப்போகிறவர்கள் மமதையினால் கேவலமான செய்கைகளில் ஈடுபடுகின்றனர். வீதிவாசிகள் ஏழ்மையினால் அன்பானவர்களாக இருக்கிறார்கள்.
கதையில் அன்பையும் பரிவையும் தயையும் சிறப்பாகக் காட்சியமைக்க ஏழைகள் உதவுகிறார்கள். சொல்லவே முடியாமல் அவர்களைக் காட்சியிலிருந்து வெளியேறப்படுபவர்கள் குற்றமிழைத்த இரண்டு பள்ளிச் சிறுவர்கள்.
“காதல்“ படத்தில் புத்தகப்பையை எறிந்துவிட்டு காதலனோடு விளையாடும் மாணவி இங்கே வேறொரு அவதாரத்தில் ஸ்டார் ஹோட்டலில் பார்வையாளர்களை ஏமாற்றும் செல்போன் வீடியோவில் தெரியும் குழந்தையின் பின்புறத்தைப் பார்த்துச் சிரிக்கிறாள், பீச் போகிறாள், குளிக்கிறாள், ரூம் போடுகிறாள். தப்பிக்கிறாள். காதலில் பாலத்திற்கடியில் ஒளிந்துகொண்டு விளையாடுகிறார்கள்.
பள்ளிக்கூடம் போகாதே காதல் செய்...! பள்ளிச்சிறார்கள் மோசமானவர்கள்.... ஆசிரியர்கள் கேவலமானவர்கள். தலைமை ஆசிரியர்கள் அதைவிட கேவலமானவர்கள். வெளியே வாருங்கள்... காதல் செய்வோம்...
படிக்க வாய்ப்பில்லாத சிறார்கள் உத்தமமானவர்கள். அவர்களிடம் அன்பு இருக்கிறது. அவர்களைத்தான் உலகம் மதிக்கிறது. அவர்களின் ஏழ்மையில் கடவுள் கூட இருக்கிறார் என்ற உச்சபட்ச புலகாங்கிதத்தால் பையை எறிந்துவிட்டு வீட்டை உதறிவிட்டு பறந்து இந்த உலகில் எங்கோ எதிலோ தொலைந்துபோவதற்கு வழிகாட்டுவதாக.
பல அற்புதமான காட்சிகள் இந்தப் படத்தில்  இருந்தபோதும், பலரும் நாகரீகமாகப் பகிர்ந்து பாராட்டுதலை வெளிப்படுத்தியிருக்க....., இன்னும் மேம்பட்டப்படமாக வருவதற்குரிய வாய்ப்புகள் நிறைய இருப்பதைச் சொல்லவே இந்த குறை சுட்டும் பகுதி. ஏனெனில் பள்ளிக்கூடத்தை சமூக அக்கறையுடையவர்கள் புனிதமாகக் கருதவேண்டும் என்ற நோக்கிற்காகத்தான். உலகில் கல்வித்தளத்தைத் தவிர புனிதமான பகுதி வேறெதுவும் இல்லை. அதில் குறைகள் இருக்கலாம். ஆனால் அதை ரகசியமாகச் சரிசெய்யவேண்டுமே அன்றி இப்போது பல தமிழ்ச்சாணல்களில் பள்ளிக்கூடத்தை விலங்குமாட்டி தெருத்தெருவாக இழுத்துச் சென்று அவமானப்படுத்தி மெஜாரிட்டியின் கவனத்தைத் தன்பக்கம் இழுத்துச் செல்வதுபோல் செய்வதை சமூக அக்கறைகொண்டோர் யோசிக்க...!
உண்மையில் வழக்கு எண்18/9 தமிழ்சினிமாவில் ஒரு மிகப்பெரிய இடத்திற்குப் போய்விட்டப்படம். பாலாஜி சக்திவேல் அவர்கள் இன்னும் மேன்மேலும் சிறப்புகளைப் பெற வாழ்த்துக்கள்.

Tuesday, December 20, 2011

678


௬௭௮

எகிப்திய பெண்கள் ஆண்களின் மோசமான நடத்தைகளுக்கு பாடம் புகட்டும் படம்.

Sunday, November 27, 2011

போப்பின் கழிவறை


‘போப்பின் கழிவறை” (THE POPE’S TOILET) என்றத் திரைப்படத்தில் மெலா நகரத்துக்கு (கற்பனையான நகரம்) போப் வருகிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும், தாம் செல்வசெழிப்படையப் போகிறோம் என்ற எண்ணத்தில் போப் வரும் நாளன்று நகரத்தில் 387 கடைகள் திறந்திருந்தனர் அந்நகரத்து மக்கள். பஞ்சுமிட்டாயிலிருந்து பதக்கங்கள் முதலான பொருட்கள் அச்சந்தையில் விற்பனைக்கு தயார்செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஊடங்கள் சொன்னது போல ஆயிரக்கணக்கானோர் வரவில்லை வெறும் 400 பிரேசிலியர்கள் மட்டுமே வந்திருந்தனர்.. அவர்களும் போப்பைப் பார்த்தோமா போனோமா என்ற சென்றுவிட, விற்பனைக்காக தயார் படுத்தியிருந்த பஞ்சுமிட்டாயிலிருந்து ஸாசேஜ், அதுயிது என எல்லாமும் விற்கப்படாமல் அந்நகரத்து மக்களின் பொருளாதாரம் சீரழிந்ததுதான் மிச்சம். சின்னச் சின்ன கடத்தல்களைச் செய்து தன் பிழைப்பை ஓட்டும் கதையின் நாயகன் பெட்டோ தன் மனைவி மற்றும் மகளோடு அன்பும் பரிவும் ததும்பிய வாழ்க்கையில் சிக்கல் ஏற்படுகின்றன. போப் வரும் அன்று ஒரு கழிவறை கட்டி பக்தர்களின் சொளகரியத்திற்காக விட்டோமானால் ஊடகம் சொன்ன ஆயிரக்கணக்கானோர் கழிவறையைப் பயன்படுத்த வசூலிக்கும் கட்டணத்தால் தமது பொருளாதர நிலமை சற்றே உயரும் என்றக் கனவில் இருக்கிறார்கள். வருபவர்களுக்கு எப்படியெல்லாம் உபசரணையோடு வரவேற்பது வசூலிப்பது என ஒத்திகைகூட பார்க்கிறார்கள். இதற்கிடையில் அவன் கடத்தல் செய்துவந்தது மகளுக்குத் தெரியவர அதன் மூலம் அவனது மனைவிக்கும் தெரிந்துவிடுகிறது. அவர்கள் அவனோடு பேச மறுத்தது அவன் மனதை இம்சித்தது. கழிவறைக்குத் தேவையான பணம் வந்ததும் கடத்தலை விட்டுவிடுவதாகச் சொல்கிறான். மகளின் கல்லூரிக்கு கட்டுவதற்காக வைத்திருந்த பணத்தை மனைவி கொடுக்கிறாள். அதைக் கொண்டு தான் போப் வரும் அன்ற அவசரஅவசரமாக கழிவறைக்கான கோப்பையை வாங்கி வருகிறான். அது நேரலையாக ஒளிபரப்பட்ட தொலைக்காட்சில் அவன் தலையில் அந்தக் கோப்பையைத் தூக்கி வருவது காட்டப்படுகிறது. அதைப் பார்த்த அவனது மகள் கண்ணீர்விடும் அந்தக் காட்சியில் அவன் தன் மீதும் தன் தாயின் மீதும் கொண்டிருந்த அன்பை உணர்கிறதாக வெளிப்படுகிறது. போப் வந்து போய்விடுகிறார். வெறும் 400 பேர் வந்துபோக 387 கடைகளில் வியபாரமில்லாமல் பொருட்கள் வீணாகிட, ”போப் வந்து சென்றால் செல்வம் வரும்” என்ற எதிர்பார்ப்பானது பொய்துப் போகிறது.”நமக்கு ஒரு நல்ல கழிவறை கிடைத்ததே” என்ற சந்தோசம் அம் மூவருக்கும் இருப்பதைக் காணமுடிகிறது.

இந்தப் படம் 1988ல் உருகுவேக்கு போப் ஜான் பால் II வருகைதந்தை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டக் கதை.

யெலேனா ரூக்ஸ் தயாரிப்பில், யென்ரிக் ஃபெர்னான்டஸூம் சீசர் கர்லோனும் இணைந்து எழுதி இயக்க, கதையின் நாயகன் பெட்டோவாக சீசர் ட்ரோனோஸ்கோவும் அவனது மனைவி கர்மேனாக வெர்ஜினியா மென்டெஸீம் அவர்களது மகள் சில்வியாவாக வெர்ஜினியா ருய்ஸூம் நடித்திருந்தனர். மூலப் பிரதி திரு.ஃபெர்னான்டஸ் செய்ய, ஒளிப்பதிவை திரு.கர்லோன் செய்தார்.

இப்படத்தை தம் பேஸ்புக் மூலம் அறிமுகப்படுத்திய தீரு.யவனிக்கா ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.


தேன்


துருக்கியில்


Honey (Bal)

எனப்படும் “தேன்” திரைப்படம், சாம் கப்லனாக்லூ (Semih Kaplanoğlu) இயக்கிய 2010ன் துருக்கிய திரைப்படம். “யூசுப் மூன்று திரைப்படத் தொகுதி”யின் கடைசியும் மூன்றாவதுமானது இதனோடு “முட்டை” மற்றும் “பால்” படங்கள் அடங்கும். 60வது பெர்லின் பன்னாட்டு திரைப்பட விழாவில் பிப் 16, 2010ல் திரையிடப்பட்டது. அதன்படி 1964 “சுசுஸ் யாஸ்”, திரைப்படத்திற்குப் பிறகு “கோல்டன் பேர்” விருது பெரும் மூன்றாவது துருக்கித் திரைப்படமாக விளங்குகிறது. துருக்கியில் அதிகாரபூர்வமாக பிப் 9, 2010ல் திரையிடப்பட, சிறந்த வெளிநாட்டு படமாக ஆஸ்காருக்கு துருக்கியின் அரசாங்க பிரதிநிதியாகத் 83வது அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. ஆனால் இறுதிச் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

கதைச் சுருக்கம்

இயற்கைக்குள் ஊர்ந்து வாழும் இடத்தில் மழைத்தூரல் மொழிக்கு பூச்சி பொட்டுகள் பதில்கொடுக்கும், துருக்கியின் வளர்ச்சியடையாத கருங்கடல் பகுதியில், ஒரு ஆறு வயது சிறுவன் “யூசுப்” காடுகள் ஊடாக தொலைந்துபோனத் தன் தந்தையைத் தேடி வாழ்க்கையின் ஒவ்வொரு புள்ளியினது அர்த்தத்தையும் வரிவரியாய் மௌனமாக வாசிக்க வைக்கும் காட்சிக்குள், தேன் ஈ வளர்க்கும் அவனது தந்தையின் ஈக்கள் எதிர்பாராத விதத்தில் காணாமல் போய்விட, வாழ்வாதாரத்தையே பயத்திற்குள் சொருவுகிறதாக உணர்கிறார். ஒரு கோர விபத்தில் தந்தை மரணம் எய்கிறார்.

படம் முழுக்க இயற்கையில் நிலவும் மொழியாடல்களே ஒலியாக காட்சிகள் நெடுக்க தொடர, பெரிய அளவிலான செயற்கையான இசை சேர்க்கப்படாததால் நாம் நம்மை அந்த அடர் காட்டிற்குள் யூசுப்போடு பயணம் கொள்கிறோம். அங்கு வாழும் உயிரினங்கள் என்னவென்று அதன் ஒலியைக் கொண்டு யூசுப்போடு சேர்ந்த நடிகர்ளாக நம்மை ஏற்றுக்கொள்ளச் செய்கிறது. மூன்றே பாத்திரங்கள் - யூசுப், அவன் பெற்றோர்கள். நேர்த்தியாக அவர்களது உறவு பிண்ணப்பட்டிருப்பது, காட்சிகளில் ஒன்றி கரைந்துபோகும் நமக்குத் தெரியவராதது இப்படத்தின் மேஜிக் எனலாம். கதைக்கு சூழல், சூழலுக்கு கதை எனவாகப் படைக்கப்பட்டிருக்கும் இந்தத் “தேன்” மனதை ஆட்கொள்ளத்தக்கது.